வழிகேடும் பாவமும்!
ஒரு கண்ணொட்டம்
ஒரு கண்ணொட்டம்
அபூ பௌஸீமா
வழிகேடு என்பதன் அர்த்தம் நேர்வழி பிறழ்ந்து வேறுவழி செல்வதாகும். இந்தச் சொல் இன்று முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆகவே, வழிகேடு பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது பற்றி ஒரு சிறிய ஆய்வை மேற்கொள்வது நமக்கெல்லாம் நேர்வழி எது என்பதைத் தெளிவாக்கிக் கொள்வதற்கு மிகவும் உதவியாகவிருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்று முஸ்லிம்கள் மத்தியில் வழிகேடு என்பதும் பாவம் என்பதும் ஒன்றே என்ற கருத்து மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே, வழிகேடு, பாவம் என்ற இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா என்பதை அறிய முயற்சிப்போம்.
வழிகேடு என்பது தெளிவாக நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று இஸ்லாம் எச்சரிக்கிறது. அதற்கான ஆதாரங்கள் ஏராளம் அல்-குர்ஆனிலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலிலும் காணக் கிடைக்கின்றன.
பாவம் என்பதைப்பற்றிப் பேசும் இஸ்லாம், நாடியவர்களுக்கு அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்ற செய்தியைத் தருகிறது.
ஆகவே தான் வழிகேடு வேறு, பாவம் வேறு என்று இனம் காண முடிகிறது.
இனி, இந்த வழிகேடு பற்றி முதலில் அல்-குர்ஆன் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ
فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينً
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-அஹ்ஸாப் – 33:36)
இவ்வசனம் வழிகேடு எது என்பது பற்றி மிகத் தெளிவாகவும் எளிதாகவும் காட்டுகிறது. விளங்கக்கூடிய விதத்தில் மிக அழகாக ஒழுங்கு படுத்தி மிகவும் பாரதூரமான எச்சரிக்கையையும் இவ்வசனத்திற்குள் அமைத்துள்ளான்.
பின்பற்றப்பட வேண்டியது வஹீயைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை இது காட்டுகிறது. அல்லாஹ் ஒரு விடயத்தில் ஒரு கட்டளையிட்டு விட்டால் அல்லது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு விடயத்தில் ஒரு கருத்துச் சொல்லி விட்டால் அந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அப்படிக் கருத்துச் சொல்லும் அதிகாரம் யாருக்குமே இல்லை! அப்படி யாரும் கருத்துச் சொல்ல முற்படுவாரேயானால் அவர் தெளிவாக அல்லாஹ்வின் ஏகத்துவத்தை மறுப்பவராகும். இது தான் இவ்வசனத்தில் இருக்கக் கூடிய எச்சரிக்கை!
மார்க்க விடயத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக கருத்துச் சொல்வதற்கு அல்லாஹ் அவனுடைய தூதர்களுக்குக் கூட அதிகாரமளிக்க வில்லை! அல்லாஹ் கூறுகிறான்:
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால்; அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு, பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
(அல்-குர்ஆன்: ஸூரா அல்-ஹாக்கா – 69:44-46)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே எவ்வாறான எச்சரிக்கையை இதன் மூலம் அவன் விடுக்கிறான் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வெச்சரிக்கைக்கு மாற்றமாக அகிலத்திற்கெல்லாம் பெரும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நடந்து கொள்ளவில்லை என்பதற்கு இதோ சான்று! உன்னிப்பாக மிகக் கவனமாக இந்த ஹதீஸை வாசித்து சிந்தியுங்கள்!
‘’நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்" என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்
நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது 'நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் 'இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்" என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது 'நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் 'இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்" என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
(நூல்: புகாரி ஹதீஸ் எண்: 247)
இந்த ஹதீஸின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்ட அந்த நபித்தோழர் மாற்றிச் சொன்ன சொல் எந்தவிதமான மாற்றுக் கருத்தையும் சொல்லி விடவில்லை, கருத்துச் சிதைவை உண்டாக்கி விடவுமில்லை. எனவே, அதை அனுமதித்து விடலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுவிடவுமில்லை. அதை உடனடியாகத் திருத்தி விட்டார்கள். இதிலிருந்து என்ன விளங்குகிறதென்றால் அல்லாஹ்வின் தூதருக்குக் கூட வஹீயில் மாற்றம் செய்யும் உரிமையில்லை என்பதுதான்! அது ஒரே பொருளைத் தரக்கூடிய ஒரு சொல்லாக இருந்தாலும் சரியே!
ஆனால், இன்று இஸ்லாமிய அறிஞர்கள் பலர் என்ன சொல்கிறார்கள் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமானால் எவ்வாறான வழிகேடுகள் நம் மத்தியில் அரங்கேறி அமல் படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும்.
ஆரம்பத்திலேயே மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் கூறும் ஒரு முக்கியமான எச்சரிக்கையைப் பாருங்கள்.
وَأَطِيعُواْ اللّهَ وَرَسُولَهُ وَلاَ تَنَازَعُواْ فَتَفْشَلُواْ وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُواْ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(அல்-குர்ஆன் – ஸூரா அல்-அன்ஃபால் – 8:46)
மீண்டும் அல்லாஹ் மனிதர்களுக்கு விடுக்கும் கட்டளை என்ன? மனிதர்கள் கட்டுப்பட வேண்டியது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டுமே என்பதுதான்! இந்தக் கட்டளையில் கருத்து வேறுபாடு கொள்பவர்களின் நிலையை அவன் தெளிவு படுத்துகிறான். கோழைகளாகிப் பலம் குன்றிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான் என்பதுதான் அது. சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் ஒருவனுக்கு துன்பங்கள், கஷ்டங்கள் வரலாம்; அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவன் பொறுமை காக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறான். அவ்வாறானவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதற்கும் உத்தரவாதம் கொடுக்கிறான்.
மற்றுமொரு வசனத்தில் அவன் விடுக்கும் எச்சரிக்கையைப் புரிந்து கொண்டால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாற்றமாக புதுப்புது விடயங்களை மார்க்கத்தில் புகுத்துபவர்களும் அவற்றைப் பின்பற்றுபவர்களும் தமது தவறை திருத்திக் கொள்ளப் போதுமானது. சிந்தியுங்கள்:
قُلْ أَطِيعُوا اللَّـهَ وَالرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّـهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
(நபியே! இன்னும்) நீர் கூறும், “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.” ஆனால், அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
(அல்-குர்ஆன்: ஸூரா ஆலு இம்ரான் – 3:32)
அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணிப்பதும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களைப் புறக்கணிப்பதும் நிராகரிப்பு என்று அல்லாஹ்வே சொல்கின்றான். இந்தக் குர்ஆனிய வசனத்தோடு கீழ்வரும் ஹதீஸை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் மேலும் விளக்கம் கிடைக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) உணவு(தானிய)க் குவியல் ஒன்றைக் கடந்து சென்றபோது, அந்தக் குவியலுக்குள் தமது கையை நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களது விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் (மழைச் சாரல் பட்டு) வானம் தீங்கிழைத்து விட்டது அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமான(தானியத்)தை மக்கள் பார்க்கும் விதமாக மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டு விட்டு, "மோசடி செய்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம் – ஹதீஸ் எண் 147
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம் – ஹதீஸ் எண் 147
இஸ்லாம் வியாபார ஒழுங்குகளைப் பேசும் போது அதற்கான வழிகாட்டல்களை வகுக்கும் போது எவ்வாறான சிறப்புமிகு சட்டங்களை வகுத்துள்ளது என்பதற்கு இது நிதர்சனமான சாட்சி! இதில் கருத்து வேறுபாடு கொண்டு வியாபாரிகளான தாங்கள் நஷ்டமடைய முடியுமா என்ற கேள்விகளைக் கேட்டு இவ்வாறான நடவடிக்கைகளை யாரேனும் நியாயப்படுத்த முற்படுவாரேயானால் அவர் பயந்து கொள்ளட்டும்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி விட்டார்கள் ஏமாற்றி வியாபாரம் செய்பவர் அவரைச் சார்ந்தவர் இல்லை என்று!
அவ்வாறு கூறி அவரது உறவு முறைகள் முறிந்து விட்டன என்று சொன்னார்களா? நிச்சயமாக இல்லை! அவ்வாறானவர்கள் முஸ்லிம் இல்லை என்று தான் பிரகடனம் செய்துள்ளார்கள். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக. இதற்கு வேறு விளக்கம் தேவையில்லை!
மனோ இச்சைகளைப் பின்பற்றி மார்க்கத்தில் தான் விரும்பியவற்றையும் தனது அறிவுக்கு எட்டிய மட்டில் இது நல்லதுதானே என்று வாதிட்டுத் தர்க்கிப்பவர்களின் மனோ நிலையை இங்கு மிகத் தெளிவாக எடுத்துக் காட்டும் ஒரு குர்ஆனிய வசனத்தைப் பாருங்கள்.
وَآتَيْنَاهُم بَيِّنَاتٍ مِّنَ الْأَمْرِ ۖ فَمَا اخْتَلَفُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
(அல் குர் ஆன்: ஸூரா அல் ஜாஃதியா – 45:17)
இக்குர்ஆனிய வசனத்தை கீழ்வரும் ஹதீஸின் உதவி கொண்டு தெளிவாகப் புரிந்து கொண்டால் நல்லோருக்கு மிகப் பெரிய படிப்பினை இருக்கிறது. அல்லாஹ் தான் அனுப்பிய கட்டளைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறான். அவன் மனிதனுக்குக் கொடுத்த மார்க்க அறிவைப் பற்றியும் சொல்லிக் காட்டுகிறான்.
அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தன் மார்க்கத்திற்கும் தன் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
(புகாரி – ஹதீஸ் எண்: 52)
இஸ்லாத்திலே அனுமதிக்கப்பட்டவையும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படிச் சொல்லியிருக்க இல்லை அது தவறு மக்ரூஹ் என்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். குர் ஆனிலும் ஹதீஸிலும் வழிகாட்டல் இல்லாத விடயத்தில் இஜ்மாஃ - ஒன்றிணைந்த முடிவு – என்ற ஒரு நிலைப்பாடு இருக்கிறது என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் இவ்வாறான கருத்துக்களுக்கு எதை ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள் என்று அவர்களும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்; அவர்களை உயர்த்திப்பிடிக்கும் மக்களும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். அவ்வாறானவர்களுக்கான எச்சரிக்கை மிகத் தெளிவானது, மிகப் பாரதூரமானது! சிந்தனை சீர்கெட்டுவிட்டால் மனித மாக்களாகத் தான் மனிதன் ஆகி விடுவான். அவனுக்கு மீட்சியே இல்லை.
இவ்வாறான மனிதர்களைப் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே,” என்று கூறுகின்றான்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் முதஃப்ஃபிஃபீன் – 83:13)
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து – அதாவது அல்குர்ஆனிலிருந்தும், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரபூர்வமான ஹதீஸிலிருந்தும் – சத்தியம் எடுத்துக் காட்டப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல் இவர்கள், பின்னால் உருவாக்கிய பொய்களை, அனாச்சாரங்களை மேன்மைப்படுத்தி வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
குர்ஆனிய வசனங்கள் இவ்வாறான வழிகேடுகளைச் சுட்டிக்காட்டும் போதெல்லாம் அந்த வசனம் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு வந்ததல்ல மாறாக அது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தவர்களுக்கு வந்தது என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு குர்ஆன் வசனமும் எம்மைப்பார்த்து ஒரு வழிகாட்டலை ஒரு கட்டளையை இடுகிறது என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُم بِقُوَّةٍ وَاسْمَعُوا ۖ قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ۚ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُم بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும் (அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக் கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதைக் கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் பகரா – 2:93)
முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? “அஷ்ஹது அ(ன்)ல்லாஹ் இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸூலுல்லாஹி,” “வணங்கத் தகுதி பெற்றவன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர என்று சாட்சி பகர்கின்றேன் இன்னும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்கின்றேன்,” என்று யாரெல்லாம் பிரகடனப் படுத்தி அல்லாஹ்விடம் முழுமையாகச் சரணடைகிறார்களோ அவர்கள்தான் முஸ்லிம்கள்.
அவர்கள் கொடுத்த அந்த வாக்குறுதிக்கு மாற்றம் செய்து அல்லாஹ் அல்லாதவர்களிடம் தம் தேவைகளைக் கேட்டு அவர்களிடம் சரணடைகிறார்களோ அவர்கள் மேலே சொன்ன குர்ஆனிய வசனத்தைச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். நிதர்சனமாகக் காண்கிறோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு மரணித்தவர்கள், பெரியார்கள், மகான்கள், அவ்லியாக்கள், ஷெய்குகள் என்றிப்படி ஒவ்வொரு பக்கம் அவர்களின் பக்தி புகட்டுப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.
இவ்வாறு மூன்றாமவருக்கு வழிப்படுபவர்கள் நஷ்டவாளிகளே என்று அல்லாஹ் குறிப்பிடுவதைப் பாருங்கள்:
وَلَئِنْ أَطَعْتُم بَشَرًا مِّثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَّخَاسِرُونَ
எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!
(அல்-குர் ஆன்: ஸூரா அல் முஃமினூன் – 23:34)
அல்லாஹ், “நஷ்டவாளிகள்” என்று குறிப்பிட்டுவிட்டால் அதன் பாரதூரம் இவர்களுக்கு விளங்கவில்லையா அல்லது விளங்கியும் சுய கௌரவம் அவர்கள் கண்களை மறைத்து விட்டதா?
மூன்றாமவரைப் பின்பற்றுபவரின் நிலைப்பாடு எவ்வாறானது என்பதை அல்லாஹ் ஓர் உதாரணத்துடன் விளக்குகிறான்:
ضَرَبَ اللَّـهُ مَثَلًا رَّجُلًا فِيهِ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ الْحَمْدُ لِلَّـهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும், ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
(அல்-குர் ஆன்: ஸூரா அஸ்ஸுமர் – 39:29)
பாமரன் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு மனிதனுக்கும் கூட இந்த உதாரணத்தை விளங்கிக் கொள்ள வேறு எவரது உதவியும் தேவையில்லை! தொடர்ந்தும் கண் மூடிப் பின்பற்றி அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகுவதில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள விளைபவர்கள் அல்லாஹ்வின் பக்கமும் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பக்கமும் உடனடியாக வர வேண்டும்.
كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّـهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ ۚ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ ۖ فَهَدَى اللَّـهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ ۗ وَاللَّـهُ يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல்-பகரா 2:213)
கருத்து வேறுபாடுகள் கொள்வதற்கு ஒரு முக்கியமான காரணம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் வழிகெட்டு விடாமல் தூதர்களையும் வேதத்தையும் காலத்துக்குக் காலம் அனுப்பினாலும் அவர்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டதன் காரணத்தினால் அல்லாஹ்வின் வேதத்தை மறுத்தார்கள். “நான்”என்ற மமதை வந்து விட்டபின் அல்லாஹ்வின் கட்டளைகள் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை! மார்க்கத் தீர்ப்பு அளிக்கத் தகுதி பெற்றவன் தானேதான் என்று அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பலன் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை மறுத்தவர்களாக ஆனார்கள்.
இன்றும் கூட அவ்வாறானவர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். எந்தெந்த அரபிப் பாடசாலையில் படித்து வெளியாகிறார்களோ அக்கல்விக்கூடத்தை அறிந்து கொள்வதற்காக உலமாக்களின் பெயர்களுக்குப் பின்னால் குறிப்பிடப்படும் அறிமுகத்தை அவர்களின் தகுதியை நிர்ணயிக்கும் ஓர் அளவு கோளாக இன்று மக்கள் மன்றத்திலே போட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறான ஒரு கல்விக்கூடம் “முஃப்தி” என்று அதில் படித்தவர்களை அறிமுகப் படுத்துகிறது. அங்கிருந்து வெளியாகிய இவர்கள், “முஃப்தி” என்றால் “ஃபத்வா” – மார்க்கத்தீர்ப்பு – கொடுப்பவர் என்று மக்களிடம் சொல்லித் தாமே தீர்ப்புக் கொடுக்கத் தகுதியானவர்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆனோ, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ இவர்களின் தீர்ப்புக்களுக்கு ஆதாரமில்லை! அல்லாஹ் எங்களை இவ்வாறான வழிகேட்டிலிருந்து பாதுகாப்பானாக!
வழிகேடுகளைப் பற்றிப் பேசுவதானால் ஒவ்வொரு குர்ஆனிய வசனமும் ஒவ்வொரு ஹதீஸும் ஆதாரமாக அமையும்.
இந்தக் குர் ஆனிய வசனத்தை அவதானமாக மிகக் கவனமாகச் சிந்தித்தால் வழிகேட்டின் பக்கம் தலை நிமிர்ந்தும் பார்க்க எண்ணம் வராது.
அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, ‘’நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்,”(என்று கூறப்படும்).
(அல்-குர் ஆன்: ஸூரா ஆலு இம்ரான் – 3:106)
கருத்த முகத்துடன் இருப்பவர்கள் எவ்வளவு பயந்து முக்கிப் போயிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள். ஈமான் கொண்டதன் பின்னர் நிராகரித்து விட்டவர்கள்தான் கருத்த முகத்துடன் இருப்பார்கள். எப்படி இவர்கள் காஃபிர்களாகி விட்டார்கள் என்று தேடிப்பார்க்கப் போனால் நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வழிப்படு-வதினின்றும் மாறு பட்டு வழிகேட்டிலாகி விடுவதினால் தான் என்பது விளங்கும்.
ஆகவேதான் அல்லாஹ் தெளிவாக ஈமான் கொண்ட மக்களுக்கு ஒரு கட்டளையை ஆணித்தரமாக விடுக்கிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
(அல்-குர் ஆன்: ஸூரா ஆலு இம்ரான் – 3:102)
அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுவது எவ்வாறு?
அவனை நேரடியாக இந்தப் பாவிகளான நாம் தொடர்பு கொள்ள முடியாது என்றும், அவன் எம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் பேச மாட்டான் என்றும், அவனை அணுக நமக்கு அருகதை இல்லை என்றும் நம்மிடம் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவனை அணுக இடைத் தரகர்களை வக்கீல்களாக அமர்த்த வேண்டும் என்றும் கூறி வைத்திருக்கிறார்கள். இவர்களைக் கண்மூடிப் பின்பற்றியதன் பலனாக, “உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்,” என்ற பிரகடனத்திற்கு மாறு செய்கிறோம். அவ்வாறு மாறு செய்யும் போது தூரமான வழிகேட்டிலாகி விட்டோம் என்பது நமக்கே புரிகிறது. ஆதலால்தான், அல்லாஹ் மேற்கூறிய வசனத்தில் முஸ்லிம்களாக-வேயன்றி மரணிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறான்.
கீழ்வரும் வசனத்தின் தாற்பரியம் மிகப் பாரதூரமானது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் ஹுஜுராத் – 49:6)
பொய்யான ஒரு செய்தியைக் கொண்டு வருபவன் தீயவன் என்றே அல்லாஹ் சுட்டிக் காட்டியுள்ளான். அவ்வாறு அவன் கொண்டு வரும் பொய்யைத் தீர விசாரிக்காமல் ஏற்றுக் கொள்பவன் தீங்கு செய்ய முற்படுவான் என்பதையும் விளக்குகிறான். இந்த வசனம் ஊரிலும், ஊடகங்களிலும் உள்ள செய்திகள் பற்றி தெரிவிப்பது போல் தெரிகிறது.
அவற்றிற்கு மட்டும் இதைப் பொருத்திப் பார்க்க முடியுமா?
மார்க்கத்தில் உள்ளது என்று எவர் சொன்னாலும் அதைத் தீர விசாரித்துப் பார்க்க வேண்டுமென்று ஏன் நாம் சிந்திக்கின்றோம் இல்லை?
குர் ஆனுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக கருத்துக்களை முன்வைத்து அவை மார்க்கமென்று முன்வைத்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றலாமா என்று தீர விசாரிக்க வேண்டுமே என்று ஏன் நாம் சிந்திக்கின்றோமில்லை?
ذَٰلِكَ بِأَنَّ اللَّـهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ ۗ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ
இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் பகரா – 2:176)
கருத்து வேறுபாடு முஸ்லிம்களுக்கு ஓர் அருட்கொடை என்று பிரசாரம் செய்யும் வழிகெட்ட அறிஞர்களும் நம்மிடையே இல்லாமலில்லை. தமது மனோ இச்சைப்படி மார்க்க விளக்கங்கள் கொடுத்து கருத்து வேறுபாடு கொண்டவர்கள் பெரும் பிளவிலேயே இருப்பது கண்கூடு. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கருத்துச் சொல்லிவிட்டதன் பின் மாற்றுக் கருத்துக் கொண்டு அதை மக்கள் மத்தியில் வைத்தவர்களின் நிலை என்னவென்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் இருக்கும் பிரகடனத்தைப் பாருங்கள்! சிந்தியுங்கள்! வழிகேடு எது, பாவம் எது என்று தெளிவாகும்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் மாஇதா – 5:3ல் ஒரு பகுதி)
அல்லாஹ்வை நம்பியவர்கள், மறுமையை நம்பியவர்கள், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பி அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் இப்பிரகடனத்தை பரிபூரணமாக விளங்கியும் வழிகேடுகளை –பித்அத்துக்களை- அரங்கேற்றுகிறார்களே; இவர்கள் அறியாதவர்களா? நிச்சயமாக இல்லை. இவர்கள் மனமுரண்டாகவே வரம்பு மீறுபவர்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு நாம் நம்மைக் காத்துக் கொள்ள முயற்சிக்காதிருந்து மரணித்து விட்டோமானால் நமக்கு ஏற்படக்கூடிய கதியை அல்லாஹ் தெளிவாக விளக்குகிறான்.
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّـهَ وَأَطَعْنَا الرَّسُولَا
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் அஹ்ஸாப் - 33:66)
மீண்டு வரமுடியாத நிலையை உணர்கிறார்கள்; காலம் கடந்து விட்டது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. புலம்புவதைத் தவிர வேறு எதைத்தான் செய்ய முடியும்! அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட அந்த நரக நெருப்பில் வேகும்போதுதான் நினைவு வருகிறது.
وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا
"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
(அல்-குர் ஆன்: ஸூரா அல் அஹ்ஸாப் – 33:67)
கண்மூடிப் பின்பற்றாதீர்கள் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்க தலைவர்களையும், பெரியவர்களையும், ஷைகுகள் என்றும் அமீர்கள் என்றும் பின்பற்றியபோது அப்பின்பற்றல் நிரந்தர நரகத்தில் சேர்த்து விடும் என்று சொன்னவர்களைக் கல்லாலும் பொல்லாலும் சொல்லாலும் அடித்ததெல்லாம் ஞாபகத்தில் வரும். புலம்புவதைத் தவிர வேறொன்றும் அவர்களுக்கிருக்காது.
رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
"எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்).
(அல்-குர் ஆன்: ஸூரா அல் அஹ்ஸாப் – 33:68)
இவ்வுலகிலே வாழ்ந்தபோது நேர்வழியைக்காட்டி இதில் உள்ளபடி வாழ்ந்தால் கைசேதப்பட மாட்டாய் என்று திரும்பத் திரும்ப அவன் சொல்லிக் காட்டினான். என்னிடமே நீ கேளு தருவதற்குத் தயாராய் இருக்கின்றேன் என்று மிகக் கருணையாளன் மீண்டும் மீண்டும் சொன்னான். ஆனால், இந்த மனிதன் அவனை விட்டுவிட்டு பெரியார்களிடமும், நல்லடியார்களிடமும் தஞ்சம் கோரினான். தனக்கு விடுதலையே இல்லை என்று தெரிந்த பிறகு அல்லாஹ்விடம் நேரடியாக முதன் முதலில் கேட்கிறான். அவனை வழிகெடுத்தவர்களைச் சபிக்குமாறு வேண்டுகிறான். என்னே மனிதனின் கைசேதம்! நவூதுபில்லாஹ்.
இந்த ஹதீஸ் ஒரு மிகப்பெரிய உண்மையை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சுட்டிக்காட்டுகிறது.
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
( நூல்: முஸ்லிம் – ஹதீஸ் எண்: 146)
அதாவது முஸ்லிம்களுக்கெதிராக ஆயுதமேந்தியவர் முஸ்லிமல்ல என்பதும் முஸ்லிம்களை வஞ்சித்தவர் முஸ்லிமல்ல என்பதும்தான் இதன் பொருள்.
இன்று முஸ்லிம்கள் மத்தியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன, செய்த, அங்கீகரித்தவற்றை பின்னால் வந்தவர்கள் ஒவ்வொரு காரணத்தை முன்வைத்து மாற்றுகிறார்கள். மாற்றியவற்றை மார்க்கமாக்கிக் கொண்டார்கள். இது தமது புதிய கண்டுபிடிப்புகளை ஆயுதமாகப் பாவித்து நபியுடைய வழிமுறையை அழிப்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்று சொல்லியிருக்க வேறு விளக்கம் கொடுப்பவர்கள் அவர்களின் வழிகாட்டலில் வஞ்சனை செய்து விட்டார்கள். இவர்களெல்லாம் இந்த ஹதீஸின் அர்த்தத்தை புரிந்து கொண்டால் அவர்களுக்குத்தான் நன்மை.
ஆகவே, வழிகேடு எது என்பவதைச் சரிவர விளங்கி நரகத்திற்கு இட்டுச் செல்லும் இவ்வனாச்சாரத்திலிருந்து பாதுகாப்பை அல்லாஹ்விடம் தேடியவர்களாக மறுமை வெற்றியை நமக்கு அல்லாஹ் அருள வேண்டுமென்று வேண்டி விடை பெறுகிறேன்.
வஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)
